Teachers day wishes – Guna Amuthan.

KL Raja Ponsing

‘ என் வாழ்க்கையை நடத்துவதற்கான வருமானத்திற்கு இனி என்ன செய்யப் போகிறேன்? ‘ என்ற கையறுநிலையில் நான் தவித்துக் கொண்டிருந்த சமயம் அது.

அப்போது தமிழகமெங்கும் நிலவி வந்த தொடர் மின் வெட்டு என் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருந்தது. மீள இயலாத பெருந்துயரும் , தனிமையும் என்னை வதைத்துக் கொண்டிருந்தன.

‘ஒரு புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்’ – என்று நான் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
ஆனால் அது எனக்கு நிகழ்ந்தது!

டிஜிட்டல் ஒளிப்படத் துறையில் வெற்றி பெறுவது எப்படி ? ‘ என்பது அந்தப் புத்தகத்தின் பெயர்.
எழுதியிருந்தவர் திரு. கே.எல்.ராஜா பொன்சிங்.

ஏற்கனவே எனக்கு ஒரு ஸ்டுடியோ வைத்து பாஸ்போர்ட் புகைப்படங்கள் எடுத்தால் என்ன? என்ற எண்ணம் இருந்தது.அதோடு ஒரு ஜெராக்ஸ் மிஷின் வாங்கிக் கொள்ளலாம். தினமும் ஒரு 300 ரூபாய் கிடைத்தால் இந்த சூழலில் ஓரளவிற்கு தாக்குப் பிடித்துவிடலாம்.

புத்தகத்தை வாசித்துப் பார்க்கிறேன். எளிய தமிழில் பயமுறுத்தாத தொழில் நுட்ப வார்த்தைகள் ஏதுமின்றி மிக நன்றாக இருந்தது. துணிச்சலாக ஒரு கேமரா வாங்க முடிவு செய்கிறேன்.

Canon 550D – என்னுடைய அப்போதைய துண்டு ,போர்வை ,ஜமுக்காளம் என்று மொத்தமாக விழுந்த பட்ஜெட்டில் திண்டாடி 32000 ரூபாய்க்கு வாங்கி விட்டேன். ஆனால் அதைப் பயன்படுத்த உணமையாகவே எனக்குத் தெரியவில்லை.

Auto mode ல் வைத்து சில படங்கள் எடுத்துப் பார்க்கிறேன்.
சில வெளிறிப்போய் – சில இருண்டு போய் … என்பதாக இருக்கிறது.
ஷட்டர் – அப்ராச்சர் என்று ஏதேதோ பதங்கள் … குழப்பம் அதிகரிக்கிறது.

புத்தகம் அதன் உள்ளீடுகளில் மிகச் சரியாக இருந்த போதிலும் எனக்குப் போதாமை.
இனி வேறு வழியில்லை. இந்தப் புத்தக ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசி விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வருகிறேன்.
இது Ambitions4 Photography Academy யில் நான் நுழைந்த கதை.

கே.எல்.ராஜா பொன்சிங் – வாழ்க்கையின் பெரும்பகுதியை அறிவுச் செயல்பாட்டுத் தளத்தில் செலவிட்டவர் . தமிழகம் கண்ட மிகச் சிறந்த கலை சார்ந்த ஆசிரியர்களில் ஒருவர்.

ஆரம்பத்தில் அவரது ஆங்கிலம் எனக்குள் பீதியைக் கிளறியது. போச்சா…இதுவும் அவ்ளோ தானா? என்று கலக்கமடைந்தேன்.

ஆனால் என் போன்ற சிலரின் மூச்சினை அவர் உணர்ந்தவராக இருந்தார். தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாறி மாறி பாலம் அமைப்பதைப் போல வகுப்புகள் போய்க் கொண்டிருந்தன. ஏனென்றால் என் போன்ற ஆங்கிலத்திற்கு அஞ்சுபவர்கள் மத்தியில் தமிழ் மொழி அறியாத வட மாநில மாணவர்களும் இருந்தார்கள். டெல்லியில் இருந்து வந்திருந்ததாக நினைவு.

நிழற் படத்தின் அடிப்படைக் கட்டுமானங்கள் மெல்லப் புரியத் துவங்கின. நிழற்படக்கலையின் விவரணையும், எல்லைகள் அற்ற பங்களிப்புகளும் ஆச்சரியப் படுத்தின.

ஆங்கிலம் மொழி மட்டுமே! அறிவாற்றல் அல்ல !!

கேமரா கருவி மட்டுமே! கற்பனைத் திறன் கொண்டது அல்ல!!

– இந்த இரண்டு செய்திகளையும் என் மூளைக்குள் பதியச் செய்தார் அவர்.

ஒருவித தனிப்போக்கில் மிக அடித்தட்டிலிருந்து என்னை ஒரு ஆசிரியராக அவர் நிழற்படக் கலைக்குள் அழைத்து வந்தார்.

ஆறு ஆண்டுகளில் இப்போது வாழ்க்கை வெகுவாக மாறியிருக்கிறது. கலை வாழ்வைச் சுவாரஸ்யமாக்கியிருக்கிறது. பொருளாதார கஷ்டங்கள் தீர்ந்திருக்கின்றன.

என் ஆசிரியர் கே.எல்.ராஜா பொன்சிங் அவர்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தில் நன்றிகளைச் செலுத்துகிறேன்.

நீங்கள் பெருமை கொள்ளத் தக்க அளவிற்கு நான் இன்னும் ஏதும் செய்துவிடவில்லை. என்றாலும் வருங்காலத்தில் அதை சீர் செய்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிற உங்கள் மாணவர்களின் கலையில் நீங்கள் என்றும் இருப்பீர்கள்!

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !

இரா.குண அமுதன்.

BWP 2012-099

(திரு.கே.எல்.ராஜா பொன்சிங் அவர்களின் இந்த பென்சில் ஓவியம் நான் சில வருடங்களுக்கு முன்பு வரைந்தது! )

Batch 48.jpg

Fashion Photography by Srikant S.